சென்னை அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலை எச்சத்தை சட்டவிரோதமாக விற்க முயன்ற 9 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
கடினமான ஓடுகளை கொண்ட கணவாய் மீன்களை சாப்பிடும்போது அதை செரிப்பதற்காக திமிங்கலத்தின் உடலில் ஒருவகை மெழுகு போன்ற பொருள் சுரக்கிறது.
இதுவே திமிங்கல எச்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திமிங்கல எச்சம் கடலில் இருந்தும், கடற்கரையோரங்களில் இருந்தும் எடுக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுவதால் சர்வதேச சந்தையில் ஒரு கிலோ திமிங்கல எச்சம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் கடலூரைச் சேர்ந்த கும்பல் சென்னையை சேர்ந்த நபருக்கு திமிங்கல எச்சத்தை விற்க வருவதாகவும், தாழம்பூரில் சந்திக்க இருப்பதாகவும் திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் , சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து ஒரு கும்பல் இதனை வாங்க வருவது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் இருந்து அவர்களை தொடர்பு கொண்ட வனத்துறையினர், மேலக்கோட்டையூர் பகுதிக்கு சென்று அந்த கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 13 கிலோ திமிங்கல எச்சம், 2 மோட்டார் சைக்கிள்கள், 1 கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.