சென்னையைப் போலவே, பெரம்பலூரிலும் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகள் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கவுல்பாளையம் கிராமத்தில் 41 கோடி ரூபாயில், 504 குடியிருப்புகள் கடந்த 2019-ல் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு தற்போது 160 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தரமற்ற முறையில் பூச்சு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கை வைத்தாலே சிமெண்ட் கலவை பெயர்ந்து விழுவதாகவும், அனைத்து சுவர்களும் விரிசலுடன் காணப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடு ஒதுக்கீடு செய்யும்போது குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பயனாளிகளிடமிருந்தும் பராமரிப்பு பணிக்காக தலா 3 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், ஆனால், இதுவரை எவ்வித பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல், குடியிருப்பு பகுதி முட்புதர்கள் மண்டி கிடைப்பதோடு, சாக்கடை நீரும் ஆங்காங்கே தேங்கி நிற்பதாக தெரிவிக்கின்றனர்.