தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை காலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது.
எனவே, ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்தும், கொரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது..
மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.