ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் கடிதத்திற்கு மத்திய அரசு இந்தி மொழியில் பதிலளிப்பதாகவும், இது அலுவல் மொழிச் சட்டத்திற்கு முரணானது எனவும் கூறி எம்.பி.வெங்கடேசன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு தீர்ப்பளித்தது. தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது என்ற நீதிபதிகள், அடிப்படை கல்வியும் தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் என்றனர்.
ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தையும், பழமையையும் உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாக பின்பற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.