தள்ளாடும் முதுமையில் தங்குவதற்கு இடமின்றி தவித்த முதியோரின் கண்ணீர் வாழ்க்கை குறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் வீடு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து கடைசி காலத்தில் ஆனந்த கண்ணீர் ததும்ப புதுவீட்டில் குடியேறியுள்ள வயதான தம்பதியினர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்புசாமி - வீராயி தம்பதி. 1970 களில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.
பின்னர் நீலகிரிக்கு வந்தவர்கள் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பல இடங்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த வயதான தம்பதியினர் கடந்த 8 வருடங்களுக்கு மேல் உடல்நிலை சரியில்லாமல் கூலி வேலைக்கு செல்லமுடியாமல் உள்ளனர். இதனையடுத்து 6 ஆண்டுகளாக ஒரு தகர கொட்டகைக்குள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
மாதம் மாதம் கிடைக்கும் 1000 ரூபாய் முதியோர் உதவித்தொகையை வைத்து இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது உணவு, உடைகளை கொடுத்து பார்த்துக்கொண்டாலும் இந்த முதிய தம்பதியினர் இருப்பதற்கு வீடு இல்லை.
இப்போது இருக்கக்கூடிய இடத்தையும் உரிமையாளர் காலி செய்ய சொல்லவே செய்வதறியாது மனம் நொந்துபோய் இருந்தனர் குழந்தைகள் யாரும் இல்லாத இந்த வயதான கணவனும் மனைவியும்.
இந்த நிலையில் கடந்த 9ம் தேதி இந்த முதியோரின் கண்ணீர் ததும்பும் பரிதாப வாழ்க்கை செய்திகளில் வெளியானது.
மேலும், சுமார் 80 வயதை கடந்த இருவரும் கடைசிக் காலத்தில் இருப்பதற்கு இடம் இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு தமிழக அரசு வீடுகட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
கருப்பசாமி - வீராயி தம்பதியினர் குறித்த தகவல் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பார்வைக்கு செல்லவே, உடனடியாக உள்ளாட்சித் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அவர்களைப் பார்ப்பதற்காக அங்கு சென்றனர்.
மேலும் தம்பதியினரை ஓரிரு நாட்களில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
இதனையடுத்து அங்கு வந்த தம்பதியினரிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், கோடநாடு சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடியிருப்பில் வீடு ஒதுக்கும்படி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கெங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து இந்த வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், வீட்டிற்கு தேவையான மின்வசதி, மளிகைப் பொருட்கள் என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கிடைத்துள்ள புதுவீட்டில் புத்தாடையுடன் பால் காய்ச்சி தற்போது மகிழ்ச்சியுடன் குடியேறி இருக்கின்றனர் இந்த முதிய தம்பதியினர். இதன் மூலம் கண்ணீரில் தத்தளித்த தம்பதியினரின் முகத்தில் இப்போது மனம் நிறைந்த மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் ததும்பி நிற்கிறது.