தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில், ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்துக்கு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 24ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி என்றும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கே.பி.முனுசாமியும் ஆர்.வைத்திலிங்கமும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் அந்த இடங்களும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.