அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தினால், ஏற்கெனவே பணியிலிருந்த யாரையும் பணியிலிருந்து விடுவிக்கவில்லை என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமூக நீதியை திட்டமிட்டு சிலர் பாழ்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகாலாம் திட்டம் குறித்து பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஒரே அர்ச்சகர் இரண்டு கோயில்களில் பூஜை செய்யும் நிலை இருந்த இடங்களை ஆராய்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின்மூலம் ஆகம விதிப்படி பயிற்சி முடித்த 58 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எக்காரணத்தையும் கொண்டும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் திட்டத்தை அரசு கைவிடாது என்று அவர் உறுதிபட கூறினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் மனதில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம், கலைஞரால் சட்டமாக கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்டார். யாரையும் எந்த பணியிலிருந்தும் விடுவித்து இந்த பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்றும், அப்படி வழங்கப்பட்டிருந்தால் அதற்கான ஆதாரத்தை தெரிவித்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் விளக்கமளித்தார். வேண்டுமென்றே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொச்சைபடுத்தி, அரசியலுக்காகவும், சமூகநீதியை பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சிலர் செயல்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.