தமிழகத்தில், கலப்பட டீசல் விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில், கடந்த 2 மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து கலப்பட டீசல் குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.