தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து ஒரு போதும் பின்வாங்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்காக தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா என அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலவச செல்போன், பண்ணை மகளிர் குழுக்கள், பொது இடங்களில் வைபை வசதி, சென்னையில் மோனோ ரயில் திட்டம், பட்டு ஜவுளி பூங்கா உள்ளிட்ட அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பட்டியலிட்டு பேசினார்.
மேலும், கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடனில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, நகைக்கடன்களும், பயிர்க்கடன்களும் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிலமில்லாத எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, இரண்டரை லட்சம் ஏக்கர் நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்து கொடுத்தது திமுக அரசு தான் என சுட்டிக்காட்டினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்கள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார். நிதிநிலையை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து திமுக அரசு ஒரு போதும்பின்வாங்காது எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.