மதுரை ஆதீனத்தின் 292ஆவது தலைவர் அருணகிரிநாதரின் உடல் இறுதிச் சடங்குகளுக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டது.
முதுமை, உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணகிரிநாதர் நேற்றிரவு காலமானார். இதையடுத்து ஆதீனத்தில் வைக்கப்பட்ட அவர் உடலுக்குத் தருமபுரம் ஆதீனம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்குமார், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் அருணகிரி நாதரின் உடல் சித்திரை வீதிகள் வழியாக இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விளக்குத் தூண் கீழவாசல் வழியாக முனிச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அங்குச் சைவநெறிமுறைப்படி இறுதிச் சடங்குகள் செய்து அருணகிரிநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.