அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், 24 அர்ச்சகர்கள் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட திருக்கோவில் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகரலாம் என்ற சட்டம் 1970ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பல சட்ட போராட்டங்களை கடந்து 51 ஆண்டுகளுக்கு பின் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்காக, சென்னை பசுமை வழிச்சாலை கபாலீசுவரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சாந்தலிங்க மருதாசல அடிகள், குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதீனம், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி.சிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பயிற்சிப் பள்ளி அர்ச்சகர்கள் 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதேபோல பிற அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள் என 38 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஓதுவார்கள், மாலைகட்டி, குடைகாரர், யானைபாகன் என மொத்தம் 196 பேருக்கும், கருணை அடிப்படையில் 12 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பொன்னம்பல அடிகளார், கலைஞர் போலவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடவுளை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ... கடவுளும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் செயல்படுவதாக புகழாராம் சூட்டினார்.