தன்னை அடுத்த மதுரை ஆதினமாக சித்தரித்து நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதினம் பயன்படுத்தி வந்த மடத்தின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை ஆதீனத்தை மையமாக வைத்து மறுபடியும் சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை ஆதின மடத்தின் 292-ஆவது ஆதீனமாக 1980ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். அவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். அப்போது கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார்.
நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போதும் அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்த மதுரை ஆதீன மடத்தின் அதாவது 293ஆவது மடாதிபதி தான் தான் என குறிப்பிட்டு நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாகவும் நித்தியானந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதினத்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த தருமபுர ஆதினம், மதுரை ஆதின அறையை பூட்டி சீல் வைத்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள அறை தருமபுரி ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் தருமபுர ஆதினத்திற்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஆதின மட வளாகத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீனம், அறையை பூட்டி சீல் வைத்தது அனைத்து ஆதீனங்களிலும் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையே எனத் தெரிவித்துள்ளார்.