தஞ்சாவூர் அருகே கடன் தவணை கட்டாததால் வீட்டிற்கு வந்து டிராக்டரை மாற்றுச்சாவி மூலம் தூக்கிச் சென்ற வங்கி அதிகாரிகளை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்த விவசாயி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலையில் படுத்து டிராக்டரை மீட்ட விவசாயியின் வாழ்வாதார போராட்டம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று விவசாய பயன்பாட்டுக்காக டிராக்டர் வாங்கியுள்ளார்.
மூன்று மாதத்திற்கு ஒரு தவணை என 52,000 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு தவணைகளை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் வங்கிக்கு சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் செவ்வாய்கிழமை விவசாயி சுரேஷ்குமார் வீட்டில் இல்லாதபோது அங்கு வந்த வங்கி ஊழியர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டிராக்டர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.
தகவலறிந்து சுரேஷ்குமார் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் டிராக்டரை மடக்கிப்பிடித்து, டிராக்டர் முன்பு படுத்துக்கொண்டு டாக்டரை எடுத்து செல்லாதவாறு டிராக்டரின் பம்பரை கட்டிப்பிடித்து ஆவேசமாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அதிகாரிகளுடன் இரண்டு மாத தவணை மட்டும்தான் கட்ட வேண்டும் அதற்காக ஏன் டிராக்டர் பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இதனால் பரஸ்பரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் அளித்துள்ளார். இதே வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்கு தவணை கட்டாத பாலன் என்ற விவசாயியை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
பல ஆயிரம் கோடிகளை கடனாக பெற்றுக்கொண்டு ஆண்டுக்கணக்கில் திருப்பி செலுத்தாமல், கண்டம் விட்டு கண்டம் தாவும் கணவான்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு நீதிமன்றத்தை நாடும் வங்கிகள், சாமானியர்களிடமும், விவசாயிகளிடமும் கால அவகாசம் கொடுக்காமல் வாகனத்தை அடாவடியாக பறித்துச் சென்று தங்கள் பராக்கிரமத்தை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடதக்கது.