பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, தினசரி விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில், இந்த வழக்கில் சி.பி.ஐ.யால், கைது செய்யப்பட்ட அருளானந்தம் என்பவனின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் சிபிஐக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப் பட்டவட்களின் விவரங்களை ஊடகத்தில் வெளியிட்ட எஸ்.பி. அந்தஸ்தில் இருந்த முன்னாள் விசாரணை அதிகாரி உள்ளிட்ட காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.
பகலில் கூட பெண்கள் அச்சமின்றி வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்த நீதிபதி, இதுபோன்ற வழக்குகளில் விரைவான, நியாயமான தீர்ப்பை வழங்குவதின் மூலம், மக்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் நீதிபதி கூறினார்.