சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் காலையில் இருந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நிறைவடைந்தது. அதிகாரிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடையதாகக் கூறப்படும் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். எம்.ஆர்.சி நகர் சத்யதேவ் அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 7வது பிளாக்கில் 5 வது தளத்தில் 4 வீடுகளில் சோதனை நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "நமது அம்மா நாளிதழ்" அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கேசிபி நிறுவனத்தின் அலுவலகமும் அங்கு உள்ள நிலையில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை எம்எல்ஏ ஹாஸ்டலுக்கு சென்ற, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதிமுக நிர்வாகி ஒருவர் எம்எல்ஏ ஹாஸ்டலுக்குள் நுழைந்த நிலையில் அவரை போலீசார் உள்ளே இருந்து அகற்றினர்.
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்டோரையும் அதிமுக மாவட்ட செயலாளர்களையும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். தங்களையும் எம்எல்ஏ விடுதிக்குள் அனுமதிக்கக் கோரி, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நுழைவுவாயில் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் ரெங்கராஜாபுரம் பிரதான சாலையில் உள்ள, எஸ்.பி. வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுபவரின் வீடு மற்றும் கேசிபி இன்ஃப்ரா (KCP Infra limited) நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளரும், எஸ். பி.வேலுமணியின் உறவினர் என்று கூறப்படுபவருமான நந்தகுமார் இல்லத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல, சென்னை மாநகராட்சியின் மற்றொரு தலைமைப் பொறியாளரான புகழேந்தி வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள இரண்டு வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுபவரின் AALAM கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் Ar Es Pe Infra என்ற நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் எஸ்.பி.வேலுமணியின் உறவினருக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அய்யாதுரை என்பவரது வீடு, அலுவலகத்திலும் காலையில் இருந்தே சோதனை நடத்தப்பட்டது.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீறுமலையில் செயல்பட்டு வரும் கேசிபி தார் பிளாண்ட் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 7 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் தொடர்புடைய 60- இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் உட்பட 250 லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரும், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் 250 பேர் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனிடையே தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து லஞ்ச ஒழிப்பு டிஜிபி கந்தசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்ற நிலையில், முதலமைச்சர் - டிஜிபி இடையிலான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.