முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதைக் கண்டறியும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு மக்கள் நலப் பணிகளில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.