முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
முந்தைய ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. அரசு ஒப்பந்தம் வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எஸ்.பி. வேலுமணி மீது கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அரசு கட்டுமானப் பணிகளில் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் காலை 6 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.பி. வேலுமணியின் வீடு மட்டுமின்றி அவருடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் சென்னையில் 15 இடங்களிலும், கோயம்புத்தூரில் 35 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒரு இடத்திலும் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.