தள்ளாடும் வயதில், ஒண்டுவதற்கான ஓட்டு வீட்டையும் உரிமையாளர் காலி செய்யச் சொல்வதால் கண்கலங்கி நிற்கும் முதிய தம்பதி, உணவு-உறைவிடத்திற்கு வழிசெய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
1970களில் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக சொல்லப்படும், 80 வயதை கடந்த கருப்புசாமி-வீராயி தம்பதிக்கு வாரிசுகள் என யாரும் இல்லாத நிலையில், காலமெல்லாம் தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்து முதுமையால் களைத்து ஓய்ந்துள்ளனர்.
அரசு வழங்கும் மாதம் ஆயிரம் ரூபாய் முதியோர் உதவித் தொகையை கொண்டு, வாடகை ஓட்டு வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வீட்டை காலி செய்ய வேண்டிய நிலையில், போக்கிடம் இல்லாத தங்களுக்கு அரசு உதவவில்லை எனில், வாழ்வை முடித்துக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.