கொரோனாவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, மாநில அளவிலான சிறப்பு பணிக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர், உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு சிறப்பு பணிக் குழு ஆலோசனை வழங்க உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படக் கூடும் என ஊகங்கள் எழுந்த நிலையில், அத்தகைய நிலையை எதிர்கொள்ளவும் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.