மறைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மதுசூதனன் உடலுக்கு குடும்பத்தினர், அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோருடன் நேரில் வந்து மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மதுசூதனன் குடும்பத்தினருக்கும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அதிமுகவில் 60 ஆண்டுகள் பணியாற்றிய மதுசூதனன், அடக்குமுறைகள் இருந்தபோது அதை தாங்கும் தூணாக இருந்தவர் என ஜெயக்குமார் கூறினார். மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது தமிழருக்கே உரிய உயரிய பண்பாடு என ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்ற பின்னர், மதுசூதனன் இல்லத்திற்கு, அதிமுக கொடிகட்டிய காரில் வந்த சசிகலா, மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு, மூலக்கொத்தளம் மயானத்திற்கு மதுசூதனன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் அமைச்சர் சேகர்பாபு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மசூதனன் உடல் எரியூட்டப்பட்டது.