இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டசபையில் வருகிற 14 ஆம் தேதி நள்ளிரவு 12மணிக்கு சிறப்பு விழாவை நடத்த அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு 100 நாட்கள் நிறைவடைகிறது. அதே நேரம் ஆகஸ்ட் 14-ந் தேதி நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. எனவே இந்த தொடர் நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக ஆளுநர் இந்த விழாவிற்கு அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. சுதந்திர போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கடந்த 1972-ம் ஆண்டு இந்தியாவின் 25-வது சுதந்திர தினத்தை அப்போதய முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கொண்டாட ஆணை பிறப்பித்தார். அதுபோல 1987-ம் ஆண்டிலும் 40-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டசபையில் நள்ளிரவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.