தஞ்சாவூரில் ஒரு குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் கோயில் நிலத்தை மீண்டும் ஒப்படைக்கக் கூறி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இளைஞர் ஒருவர் வாளை எடுத்து வந்து வெறித்தனமாக கிராம மக்களை தாக்கிய பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள பொய்யுண்டார் கோட்டை கிராமத்தில் வீரனார் என்ற கோயில் அமைந்துள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ள நிலையில், அதற்கு அருகே உள்ள நிலத்தை ஆக்கிரமித்து விவசாயியான சின்ராசு என்பவர் வீடு கட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர். சின்ராசுவை அந்த இடத்தை விட்டு வெளியேறக் கூறி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அதனை கண்டுகொள்ளாத சின்ராசு கிராம மக்கள் கோயிலுக்கு வரும் வழியை கம்பி வேலி போட்டு அடைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தாசில்தாரை சந்தித்து மனு அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் அதிகாரிகள், நிலத்தை அளவை செய்து, சின்ராசின் வீடு அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து, கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து சின்ராசு அமைத்த கம்பி வேலியை பிரித்துவிட்டு, அந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சுற்றி கல் நட முயன்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ராசு குடும்பத்தினர் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருதரப்பினர் இடையே மோதல் உருவானது. வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே, வீட்டிலிருந்து பெரிய வாளை எடுத்து வந்த சின்ராசு, கிராம மக்களை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கினார்.
வாளைக் கண்டு சிலர் அலறியடித்துக் கொண்டு ஓடிய நிலையில், சிலர் பதிலுக்கு கட்டையை எடுத்து தாக்குதல் நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல் மாறிக் மாறி இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த மோதல் சம்பவத்தில் இருதரப்பினரைச் சேர்ந்த 9 பேர் காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சின்ராசையும் குடும்பத்தில் சிலரையும் கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.