தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஆகஸ்டு முதல் நாள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், அதில் காயமடைந்த மீனவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
பன்னாட்டுச் சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை கண்மூடி வேடிக்கை பார்க்காமல் இதற்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை பன்னாட்டுச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டியதும் நம் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.