வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வருகிறது.
சமீபத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு தனிநீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, ஒருலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டில் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், தனுஷ் தரப்பினர் 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில், காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. அதன் பின் இந்த வழக்கு, விஜய் வழக்கை விசாரித்த தனி நீதிபதியான எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.