7 வருடங்களாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருந்துபடியே மது அருந்தி தொல்லை கொடுத்து வந்த காதல் கணவனை, பள்ளி ஆசிரியை ஒருவர் உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாதிமறுப்பு திருமணம் செய்தவர்கள் வாழ்வில் புகுந்த மது அரக்கனால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், சென்னை பூம்புகார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும், பி.மன்னார் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இளமதியும் காதலித்து இருவீட்டார் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் பூம்புகார் நிறுவனத்தில் இருந்து மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டார். அன்றில் இருந்து உருப்படியாக எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மது அருந்தி பொழுதை கழித்து வந்துள்ளார் மணிகண்டன். அவ்வப்போது வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடித்து உதைத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.
பள்ளிக்கூடம் சென்று வந்தாலும், யாருடனாவது செல்போனில் பேசினாலும் சந்தேகப்பட்டு ஆபாசமாக பேசுவதை வழக்கமாக மாற்றிய மணிகண்டன் சம்பவத்தன்று அதேபோல அறுவெறுக்கதக்கவகையில் பேசி வார்த்தைகளால் சுட்டதால் ஆத்திரம் அடைந்த இளமதியும் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வார்த்தைகள் தடிக்க ஆத்திரமடைந்த இளமதி, கட்டில் கால் அளவு கொண்ட உருட்டு கட்டையால், கணவன் மணிகண்டனை விளாசி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிலையில், உருட்டுகட்டையுடன் இளமதி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது மணிகண்டன் உயிரிழந்தது தெரியவந்தது. மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், இளமதியை கைது செய்ததோடு, அவரது இரு குழந்தைகளையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இளமதிக்கு எதிராக , மணிகண்டனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியை இளமதியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் இந்த கொலைக்கு யாருடைய தூண்டுகோல் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.
பெற்றோர் மற்றும் உற்றார் உறவினரை எதிர்த்து சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டோர் சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்துகாட்ட வேண்டும். அதை விடுத்து வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையானால் என்ன மாதிரி விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.