திருத்தணியைச் சேர்ந்த, வயதான தம்பதியை சொத்துக்காக அவர்களது உறவினரே திருப்பதி அழைத்துச் சென்று கொலை செய்து புதரில் வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர்கள் பைனான்சியர் சஞ்சீவி ரெட்டி - மாலா தம்பதி. இவர்களது ஒரே மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், தனியாக வசித்து வந்த தம்பதிக்கு உதவியாக சஞ்சீவி ரெட்டியின் தங்கை மகன் ரஞ்சித்குமார் என்பவன் அவர்களது வீட்டோடு தங்கி இருந்துள்ளான். இந்த நிலையில் சஞ்சீவி ரெட்டி - மாலா தம்பதியை கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் காணவில்லை என சஞ்சீவி ரெட்டியின் தம்பி பாபு போலீசில் புகாரளித்துள்ளார்.
புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ரஞ்சித் குமாரும் அவனது நண்பன் விமலும் சொத்துக்காக தாங்கள்தான் அவர்களை கொலை செய்ததாக காவல் நிலையத்தில் சரணடைந்தனர் என்று கூறப்படுகிறது.
திருப்பதி கோவிலுக்குச் செல்லலாம் என அழைத்துச் சென்று கொலை செய்து, ராமச்சந்திராபுரத்தில் புதர் பகுதியில் உடல்களை வீசியது தெரியவந்ததை அடுத்து ஆந்திர போலீசார் உதவியுடன் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.