மதுரையில் பிரிந்து சென்ற மனைவி அரசு ஊழியரானதால், 3 லட்சம் ரூபாய் கேட்டு மருமகன், மாமனாரை அரிவாளால் வெட்டியுள்ளான். தன் மீது மிளகாய் பொடி தூவப்பட்டாலும் அரிவாளை மடக்கி பிடித்த மாமனார், அரை மணி நேரத்திற்கு மேலாக அரிவாளுடன் போராடி உயிர் தப்பிய பரபரப்பான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
மதுரை கணேஷ் தியேட்டர் அருகே உள்ள பிக்சர் சாலை வாகன போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த சாலையின் மையப்பகுதியில் நடந்து சென்ற பெரியவரை இருசக்கரவாகனத்தில் வந்து மறித்த இளைஞர் வாயில் லுங்கியை கவ்விக் கொண்டு மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்ட முயன்றார், அடுத்த வினாடி அந்த பெரியவர் அரிவாளை மடக்கி பிடித்துக் கொண்டார்.
இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளியபடி போராடிக் கொண்டிருக்க அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றனர். சிலர் அவர்களிடம் சென்று விசாரித்த போது குடும்ப விவகாரம் என்று சொல்லி அந்த இளைஞர் அந்த பெரியவரை வெட்டுவதில் தீவிரம் காட்ட அந்த பெரியவரோ உடும்புபிடியாக அரிவாளை பிடித்துக் கொண்டு விடமறுத்தார்.
அவர்கள் இருவரும் சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக பலம் பொருந்திய இரு காளைகளை போல மல்லுக்கட்டிக் கொண்டிருக்க அவர்களை சமாதானம் செய்ய மேலும் சிலர் அங்கு கூட சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார், அரிவாளுடன் அடம்பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து அவரிடம் இருந்த அரிவாளை கைப்பற்றினர்.
மிளகாய் பொடி தூவப்பட்ட நிலையிலும் தனது உயிரை காக்கப் போராடிய அந்த பெரியவரை மீட்டனர். அரிவாளை பிடித்து தடுத்து போராடியதால் அவரது உள்ளங்கை , முழங்கை மற்றும் நெத்தியில் வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், வெட்ட முயன்றவர் மருமகன் முத்துமணி என்றும் அரிவாளுடன் போரடியவர் அவரது தாய்மாமா ராஜபாண்டி என்பதும் தெரியவந்தது.
விசாரணையில் தனது மகளை தனது தங்கை மகனும், முறை மாப்பிள்ளையுமான அனுப்பானடியை சேர்ந்த முத்துமணிக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து வைத்ததாக கூறியுள்ள ராஜபாண்டி, மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான மருமகன் முத்துமணி , போதையில் அடித்து உதைத்து துன்புறுத்தியதால் தனது மகளுக்கு கர்ப்பப்பை பாதிப்படைந்து அதனை அகற்றும் நிலை ஏற்பட்டதால் அவனை பிரிந்து வந்து மகள் தனது வீட்டில் வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
3 வருடமாக இருவருக்கும் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், தனது மகள், குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று ஒரத்த நாட்டில் வருவாய் துறையில் எழுத்தராக பணிபுரிந்துவருவதால், வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக கூறி தன்னிடம் மருமகன் 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்துள்ள ராஜபாண்டி, அந்த பணத்தை கொடுக்க மறுத்ததால் தன்னை வெட்டியதாகவும், தான் தடுத்து பிடித்ததால் கையில் வெட்டு விழுந்ததாகவும், மேலும் இரு இடங்களிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்ப பிரச்சனை என்றாலும் இது போன்ற தாக்குதல்களை பொதுமக்கள் துணிச்சலுடன் தட்டிக்கேட்பதுடன் உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்... அதை விடுத்து வேடிக்கை மனிதராய் கடந்து செல்வது கண்டனத்துக்குரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்...