சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் ராம்நாத்கோவித், மனித குலத்தின் சிறந்த மற்றும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா, மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி படத் திறப்பு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பொன்னாடை, புத்தகம் வழங்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை, குடியரசு தலைவர் திறந்து வைத்தார்.
முதலில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டார். திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுத்திய சிறப்பு திட்டங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான சட்டங்களை சட்டமன்றம் இயற்ற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு சட்டமன்றம், நாட்டிலுள்ள சட்டமன்றங்களில் முதன்மையானது என்று தெரிவித்தார். சமூகநீதி, சமூக மேம்பாட்டுக்காக கருணாநிதி தொடர்ந்து உழைத்தார் என்று ஆளுநர் புகழாரம் சூட்டினார்.
வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கிய குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த், கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழிலேயே தெரிவித்தார்.
முண்டாசுகவி பாரதியாரின் "பாரத தேசம்" குறித்த பாடலை மேற்கோள்காட்டி ஜனாதிபதி உரையாற்றினார்.
மனித குலத்தின் சிறந்த மற்றும் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் புகாழரம் சூட்டினார்.