தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கிறார்.
சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, கடந்த 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த மாதம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அத்துடன், தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் உருவப்படத்தை பேரவையில் திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையொட்டி, இன்று மாலை சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். மேலும், சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
பிற்பகல் டெல்லியில் இருந்து பிற்பகல் விமானம் மூலம் சென்னை வரும் குடியரசுத் தலைவர், மாலை 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார். சட்டசபை விழா நிகழ்விடத்துக்கு மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் வருகை தருகிறார். கலைஞரின் திருஉருவப்படத் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆளுநர் மாளிகை செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு தங்குகிறார். நாளை காலை கோவை சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊதகைக்கு செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலக வளாகம், சட்டமன்ற மண்டபம் ஆகிய இடங்களில், காவல் ஆணையர் தலைமையில் காவல் அதிகாரிகள், காவலர்கள், போக்குவரத்துக் காவல், கமாண்டோ படை வீரர்கள், சிறப்புக் காவல் படை உள்ளிட்ட 5,000 காவல் துறையினருடன் 5 அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் சென்னையில் செல்லும் வழித் தடங்களில், போக்குவரத்துக் காவல் துறையினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.