மேட்டூர் அணையிலிருந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு உரிய நேரத்தில் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்துவைத்தார். மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு 137 நாட்களுக்கு 9.06 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த 2007ஆம் ஆண்டு உரிய தேதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தண்ணீர் திறப்பு இல்லாமல் போனது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82 அடிக்கு மேல் இருப்பதாலும் , நீர் வரத்து திருப்திகரமாக இருப்பதாலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது