தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
நாமக்கலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தின் முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்த அதிமுகவின் கவன ஈர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது என்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும், இபிஎஸ்சுடன் இணைந்து கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டுக்கு முன் அதிமுகவின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பனகல் சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக விரைந்து நிறைவேற்றக் கோரி விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.