சேலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். குடியை மறக்க கோயிலுக்கு சென்று பூஜை நடத்திய 4 பேரும், சத்தியத்தை மறந்து குடித்துவிட்டு, கார் ஓட்டியதால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
சேலம் அருகே 2 நாட்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையில் கண்மூடித்தனமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய காட்சிகள் வெளியாகின.
இந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் சிக்கி காயமடைந்தது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித், அருண் என்பதும், பழனிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
அதிவேகமாக வந்ததோடு விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.
விபத்து ஏற்படுத்தியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக காரை ஓட்டிய சதீஷ்குமார் என்பவன் சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில் காரில் 4 பேர் பயணித்ததும், 4 பேரும் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்ததை அடுத்து, காரின் உரிமையாளர் வினோத் உட்பட மற்ற மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
குடிப்பழக்கத்தை மறக்க, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள பூமணி கோயிலுக்கு சென்று பூஜை நடத்திய 4 பேரும், மந்திரித்த கயிறும் கட்டியுள்ளனர். பின்னர், வரும் வழியிலேயே டாஸ்மாக் கடையை பார்த்து மனம் மாறி குடித்துவிட்டு வந்து விபத்தை ஏற்படுத்தியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் நான்கு பேர் மீதும் மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சேலம் மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த அஜித்குமாரும், அருணும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் தப்பியதாக சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபினவ் தெரிவித்துள்ளார்.