வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வேலைவாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவித இடஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச்சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க சட்ட வல்லுனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி, நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்திருந்தார். அதன்படி, சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த சிறப்பு ஒதுக்கீட்டை 26-2-2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்வி சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இந்த புதிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழ்நாடுஅரசின் சட்டம் 8/2021ல் கூறப்பட்டுள்ளதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.