மதுரையில் எதிர்தரப்பை கொலை செய்யும் நோக்கில் பட்டாக்கத்தியுடன் ஆட்டோவில் சுற்றித் திரிந்த ரௌடியை அவனது கூட்டாளிகளுடன் தக்க நேரத்தில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
சிம்மக்கல் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரைப் பார்த்து, அப்பகுதியில் பட்டாக்கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்த ரௌடி ஒருவன் ஆட்டோவில் ஏறி தப்பிச் செல்ல முயன்றான். அவனை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, போலீசாரைத் தள்ளிவிட்டு தப்பிச் சென்றான்.
ஆட்டோவில் மேலும் 3 சிறுவர்கள் இருந்த நிலையில், போலீசார் அவர்களை விரட்டிச் சென்று யானைக்கல் பாலம் அருகே மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவன் பெயர் விருமாண்டி என்பதும் ஆட்டோ அவனுடையதுதான் என்பதும் தெரியவந்தது.
2 நாட்களுக்கு முன் தன்னைத் தாக்கிய ஒருவரை கொலை செய்வதற்காக விருமாண்டி அங்கு வந்தது தெரியவந்தது. தக்க நேரத்தில் போலீசார் அவனை மடக்கிப் பிடித்ததால் ஒரு கொலைச் சம்பவம் தவிர்க்கப்பட்டது.