தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் இரண்டாம் நாள் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப் படம் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஆகஸ்டு இரண்டாம் நாள் மாலை 5 மணிக்குச் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் விழா நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் குடியரசுத் தலைவரும், தலைமை ஏற்கத் தமிழ்நாடு ஆளுநரும், முன்னிலை வகிக்க முதலமைச்சரும் இசைவளித்துள்ளதாகத் தெரிவித்தார். அப்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப் படத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.