ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து எந்த நேரமும் ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாலை நிலவரப்படி அணைக்கு 13 ஆயிரத்து 330 கன அடியாக நீர்வரத்து உள்ள நிலையில், நீர்மட்டம் 98 அடியை எட்டியுள்ளது. 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும்.
எந்த நேரமும் நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் ஒலிப்பெருக்கி கொண்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.