கர்நாடக அணைகளில் இருந்து 17 ஆயிரத்து 500 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படும் நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடகாவிலுள்ள கபினி அணைக்கு 14 ஆயிரத்து 300 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரியில் 15 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
அதேபோல் அங்குள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 800 கன அடியாக நீர்வரத்து உள்ள நிலையில், அணையிலிருந்து 2 ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி நீர் எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஒகேனக்கல் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.