இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார். சில இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம், மகளிர்க்கு இடஒதுக்கீடு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவற்றை கலைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மீஞ்சூர் மற்றும் வட நெம்மேலியில் 100 எம்.எல்.டி கடல் நீரை, குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளது எனவும், சென்னையில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் விதமாக குடிநீருக்கு மீட்டர் பொருத்தப்பட்டு வீடுகள் தோறும் தண்ணீர் வழங்கப்படும் எனவும் கூறினார்.
சென்னையில் 500 இடங்களில் உள்ள குளங்களில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை பெருக்க உள்ளதாகவும் கே.என்.நேரு கூறினார்.