எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் அளித்த புகாரில், மற்றொரு அரசியல் பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாஜக நகர தலைவரான புவனேஷ் குமார், கடந்த 30ஆம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். சட்டமன்ற தேர்தலின்போது ஆரணி தொகுதியில் சீட் கேட்டு சென்னை பெரம்பூரை சேர்ந்த அரசியல் பிரமுகரான விஜயராமனை அணுகியதாகவும், மத்திய அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உதவியாளர் எனக் கூறிக்கொண்ட நரோத்தமன் என்ற நபரை அவர் கைகாட்டியதாகவும் புகாரில் புவனேஷ் குமார் கூறியுள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக உறுதியளித்து, 1 கோடி ரூபாய் கேட்டதாகவும் அதை நம்பி முதல் தவணையாக 50 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் புகார் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக சட்ட ஆலோசனை பெற்று, பாண்டி பஜார் போலீசார், நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, விஜயராமன், அவரது மகன் சிவபாலாஜி ஆகிய 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.