மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்க, தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சி குழுவினர் இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால், அதனை தடுக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் விதத்தில் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் நேரில் சென்று வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் டெல்லி செல்ல இருக்கின்றனர். நாளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து தீர்மானங்களை வழங்க இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார். 4 மாநிலங்களின் கருத்துகளை கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று ஷெகாவத் தெரிவித்துள்ளார்.