தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்குப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளின் இயக்கமும் தொடங்கியுள்ளது.
காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட்கள் விற்கும் கடைகள் முந்தைய வாரத்தில் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், தேநீர்க் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகைப் பண்டங்கள் விற்பனைக் கடைகள் வழக்கமான 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் இருந்து இரண்டு மாதங்களுக்குப் பின் இன்று முதல் புதுச்சேரிக்கு மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே ஆட்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்கிற விதிமுறைகளுக்குட்பட்டுப் புதுச்சேரியில் இருந்தும் தமிழகப் பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேநேரத்தில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி தவிரப் பிற மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கத் தடை நீடிக்கிறது. மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கவும் தடை நீடிக்கிறது.