தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இன்று முதல் மேலும் ஒரு வாரம் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய தளர்வுகளாக, தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி தவிர்த்து, பிற மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசுப் பேருந்து பேக்குவரத்துக்கான தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள், மதுபானக் கூடங்கள் திறக்கப்படுவதற்கான தடை நீடிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர ஏனைய சர்வதேச விமானப்போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் உயிரியல் பூங்காக்கள் திறப்பதற்கு தடை மேலும் நீட்டிக்கப்படுகிறது.
உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.