தென்மேற்கு பருவக்காற்று தமிழகத்தில் தீவிரமடைவதின் எதிரொலியாக, அடுத்த 5 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், திண்டுக்கல், ஈரோடு, நெல்லையில் கன மழையும் பெய்யக்கூடும்.
திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் நீலகிரி, கோவை, தேனியில் மிககனமழையும், திண்டுக்கல், தென்காசி, குமரியில் கனமழையும் பெய்யக்கூடும்.
கனமழையால் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.