கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை தொடர்ந்து நீடிப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 48அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை தற்போது 45 அடியை தாண்டியுள்ளதால், அங்கிருந்து வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் தாமிரபரணியில் திறக்கப்பட்டுவருகிறது.
இதேபோன்று, 18 அடி முழு கொள்ளளவு கொண்ட சிற்றாறு ஒன்று 17 அடியை எட்டியுள்ளது. இங்கிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது.இதனால் தாமிரபரணி ஆற்றின் தாழ்வான பகுதிகளான சிதறால்,திக்குறிச்சி, குழித்துறை, பரக்காணி, வைக்கலூர் ஆகிய ஊர்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளத.இதனிடையே, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குழித்துறை சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோதையாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமான திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால், திற்பரப்பு அருவியிலுள்ள நீச்சல்குளம், கல் மண்டபம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.