வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக, மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்கக்கடலில், புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஓரிரு தினங்களில் உருவாக கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், பரவலாக மிதமானது முதல் கனமழை வரையில் மழை பெய்துள்ளது. இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு, கன முதல் மிக கனமழை வரையில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மண்சரிவு ஏற்படக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வானிலை மையம் கூறியுள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், ஆந்திர மாநிலத்தை ஒட்டிய கடலோர பகுதிகள், மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு, வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று வலுவிழந்துள்ளதால் தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அதிக மழை கிடைத்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வரும் 11 ஆம் தேதி மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்ககடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு இதனால் பெரிய அளவில் பாதிப்பும் பலனும் இல்லை என கணிக்கப்பட்டுள்ளது.