ஆனி அமாவாசையை முன்னிட்டு, முக்கிய கோயில்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
அமாவாசை நாட்களில் ஆறுகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். இன்றைய ஆனி அமாவாசை திருவாதிரை நட்சத்திரத்தில் வருவதால் ஒரு நாள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது, 12 ஆண்டுகளுக்கு தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும் என நம்பப்படுகிறது.
இதனை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு நடத்தியதோடு கடலில் புனித நீராடினர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி புனித நீராடினர்.
இதேபோல், சேதுக்கரை, தேவிபட்டணம்,சாயல்குடி அருகேயுள்ள மாரியூர் கடற்கரையிலும் ஏராளமானோர் புனிதநீராடி வழிபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், காவிரி படித்துறையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.