தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி கொடுக்கப்படாது என மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை விவகாரத்தில் டிபிஆர் எனப்படும் முதல் நிலை திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது சரியான அணுகுமுறை இல்லை என்பதை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.
மேலும், காவிரி - குண்டாறு - வைப்பாறு நதிகளை இணைக்க நிதி ஒதுக்கவும், மார்கண்டேய நதியில் கர்நாடக தடுப்பணை கட்டிய விவகாரத்தில் நடுவர்மன்றம் அமைக்கவும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவர் நியமனம் செய்யவும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.