தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த இரு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் இயங்கத் தொடங்கின.
முன்னதாக பேருந்துகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் இயல்பு நிலை பெரும்பாலும் திரும்பியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் பயணிகள் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.