தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்ததை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வகையான வழிபாட்டுத் தலங்களும் காலை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா பரவல் குறைந்து வருவதால், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாட்டுத் தலங்களை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து வகையான வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் சென்றனர். நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சியில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்குத் திறக்கப்படுகிறது.
இன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழனி முருகன் கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலும் பக்தர்கள் வரிசையாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறக்கப்பட்டது. வேளாங்கண்ணியில் அதிகாலையில் திருப்பலி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டுத் தலங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
வேளாங்கண்ணியில் அதிகாலையில் திருப்பலி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டுத் தலங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.