தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து இயங்கவும், டாஸ்மாக் கடைகள், வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் ஒரு வாரத்திற்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 வகைகளாக பிரிக்காமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 5 ஆம் தேதி முதல் ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், பேக்கரிகள் டீக்கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் தேநீர் அருந்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 27 மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எஞ்சிய 11 மாவட்டங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள், இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க நடைமுறையில் இருந்த இ.பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மால்கள் எனப்படும் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நகைக்கடைகள்,துணிக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது.
ஜிம், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐ.டி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.லாட்ஜூகள், கெஸ்ட் ஹவுஸ் ஆகியவை செயல்படவும் அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கேளிக்கை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளது.
எனினும், தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி கிடையாது. அருங்காட்சியகங்கள், பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.